உத்தரப்பிரதேசத்தின் பாக்பட் மாவட்டத்தில் வியப்பூட்டும் மோசடி ஒன்று வெடித்துள்ளது. திருமணமான பெண்கள் ‘திருமணமாகாதவர்கள்’ என்று பொய்யாகக் கூறி அரசின் முக்யமந்திரி கூட்டுத் திருமணத் திட்டத்துக்காக விண்ணப்பித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 593 பெண்கள் இந்தத் திட்டத்துக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், ஆய்வின்போது அதில் 69 பெண்கள் ஏற்கனவே திருமணமானவர்கள் என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அரசு வழங்கும் 1 லட்சம் ரூபாய் நிதியுதவியும் பரிசுகளும் பெறும் நோக்கில் இந்தப் பெண்கள் திட்டத்தில் பெயர் சேர்த்தது தெரியவந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் அஸ்மிதா லால் உத்தரவின் பேரில் சமூக நலத்துறை, வருவாய் துறை, வளர்ச்சி அலுவலகம் ஆகியவை இணைந்து விண்ணப்பங்களைச் சரிபார்த்தபோது இந்தப் பெரிய மோசடி வெளிச்சத்துக்குவந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்குள் திருமணம் ஆன பெண்களே பெரும்பாலும் இந்தப் பட்டியலில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் பின்னர் அனைத்து போலியான விண்ணப்பங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பாக்பட் நகரம், பினௌலி மற்றும் சப்பரௌலி பகுதிகளில் இருந்து அதிகமான மோசடி விண்ணப்பங்கள் வந்ததாக கூறப்படுகிறது.
அரசின் நிதி உதவிக்காக ‘திருமணமானவர்கள்’ தங்களை ‘திருமணமாகாதவர்கள்’ எனக் காட்டிய இந்தச் சம்பவம் தற்போது முழு மாநிலத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
