பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான 121 தொகுதிகளிலும், இன்று மாலை 5 மணியுடன் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அரசு ஏற்கனவே பெண்களுக்கு உதவித் தொகை அறிவித்திருந்த நிலையில், தேர்தலுக்குச் சற்று முன்பாக, ‘பிரதான் மந்திரி ரோஜ்கார் யோஜனா’ திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரத்தை வரவு வைத்தது.

இதற்குப் போட்டியாக, எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று ஏற்கனவே வாக்குறுதி அளித்து இருந்தது. இந்த நிலையில், பா.ஜ.க. கூட்டணிக்குக் கடுமையான போட்டி அளிக்கும் வகையில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவரும், முதல்-மந்திரி வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், பெண்களுக்கு ஒரே தவணையாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி தினமான ஜனவரி 14-ம் தேதி ‘யோஜனா’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.30 ஆயிரம் வழங்குவோம்” என்று தெரிவித்தார். மேலும், விவசாயிகளுக்கு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.300-ம், கோதுமைக்கு ரூ.400-ம் போனஸ் தொகையாக வழங்கப்படும் என்றும், பாசனத்துக்காக இலவச மின்சாரம் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
