குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு தனியார் மகப்பேறு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி அளிக்கும் ஹேக்கிங் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ‘Weak Password’ காரணமாக, அந்த மருத்துவமனையின் பிரசவ வார்டுகளின் ரகசிய காட்சிகள் இணையத்தில் விற்பனை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், ‘admin123’ என்ற எளிமையான கடவுச்சொல்லே (Weak Password) ஹேக்கிங்கிற்கு முக்கிய காரணமாக இருந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம், இணையப் பாதுகாப்பின் அவசியத்தையும், வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.
மருத்துவமனை போன்ற மிக முக்கியமான இடங்களில் கூட, எளிதில் ஊகிக்கக்கூடிய கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது எத்தகைய பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஹேக்கர்கள் இவ்வாறாக சுமார் 50,000 வீடியோக்களை திருடி விற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தனிநபர்கள் முதல் நிறுவனங்கள் வரை அனைவரும் சைபர் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம்.
