சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த ரயில் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ராம் நகர் ரயில் நிலையம் அருகே கொர்பாவிலிருந்து பிலாஸ்பூர் நோக்கி சென்ற பயணிகள் ரயில், சரக்கு ரயிலுடன் மோதியதில் 4 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். விபத்துக்குப் பிறகு பல பயணிகள் ரயிலில் சிக்கிய நிலையில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தொடக்க தகவலின்படி, கொர்பா பயணிகள் ரயிலின் முதல் பெட்டி, மோதலின் தாக்கத்தால் சரக்கு ரயிலின் மேல் ஏறியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து பரவிய வீடியோக்களில், ரயில் பெட்டிகள் நொறுங்கி கிடப்பதையும், உள்ளூர் மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதையும் காணலாம். மாவட்ட ஆட்சியர் சஞ்சய் அகர்வால் உறுதிப்படுத்தியதாவது, “சிலர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது,” என தெரிவித்துள்ளார்.

தகவல் கிடைத்ததும் ரயில்வே அதிகாரிகள், மீட்பு மற்றும் மருத்துவ அணிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.