ஒடிசா மாநிலம் சுபர்ணபூர் மாவட்டத்தில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, மூன்று நபர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒரு ஷோரூமில் பணிபுரியும் அந்தப் பெண், கடந்த வியாழக்கிழமை அன்று வேலை முடிந்து நடந்து சென்றுகொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த மூன்று பேர் அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் வைத்து, அவர்கள் அந்தப் பெண் மீது மயக்க மருந்து தெளித்துள்ளனர். அந்தப் பெண் மயங்கியதும், அவரை கடத்திச் சென்று மூவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சுயநினைவுக்குத் திரும்பிய பிறகு, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் சென்று தைரியமாகப் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாக விசாரணையைத் தொடங்கிய காவல்துறை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை வெள்ளிக்கிழமை காலையில் பிடித்துள்ளது.

மூன்றாவது நபரைத் தேடும் பணி தீவிரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சமூக விரோதச் செயல் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.