அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான கே.ஏ.செங்கோட்டையன், பசும்பொன் குருபூஜையின்போது ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) உடன் ஒரே காரில் சென்று, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரைச் சந்தித்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரிந்து சென்றவர்களைக் கட்சியில் இணைக்க வேண்டுமென பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு  காலக்கெடு விதித்த காரணத்தால் ஏற்கனவே அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தச் சந்திப்புக்குக் கண்டனம் தெரிவித்து செங்கோட்டையனை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இ.பி.எஸ். நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.

இந்நிலையில், கோபியில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், நீக்கம் குறித்து இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் விளக்கம் அளிப்பதாகத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரிலிருந்து எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் மறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.