பஞ்சாப் மாநிலம் மோகாலியில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்கு, 17 வயது மகளை தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகச் சொஹானா பகுதியைச் சேர்ந்த ஒரு நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

தன் தாயார் குடும்ப வன்முறை காரணமாக வீட்டை விட்டுச் சென்ற பிறகு, அந்த சிறுமி  தன் தந்தை, சித்தப்பா மற்றும் தாத்தா-பாட்டி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். ஒரு நாள் இரவு, தனது தந்தை தன்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, ஆபாச வீடியோக்களைக் காண்பித்து, அதன்படி செய்யுமாறு வற்புறுத்தியதாகவும், மறுத்தபோது தன்னைத் தாக்கிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

சிறுமி மறுப்பு தெரிவித்தபோதெல்லாம், அவரது தந்தை தொடர்ந்து தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் போலீசார் தெரிவித்தனர். ஒரு நாள், வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் இல்லாத நேரத்தில், அவர் மீண்டும் வன்கொடுமை செய்ய முயன்றபோது, சிறுமி தைரியமாக , தந்தையின் கையைப் பிடித்துக் கடித்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து தன் மாமா-அத்தை வீட்டிற்குச் சென்றார்.

அவர்களின் புகாரின் பேரில்,  போலீசார் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின்  கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்தனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் முன்பும் நிகழ்ந்துள்ளனவா என்பதை அறிய, போலீசார் அந்தக் குற்றவாளியின் பின்னணியையும், பிற குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.