காரைக்கால் நகரப் பகுதியில் குடியிருப்பு கட்டிடடத்தில் வசித்து வரும் தம்பதியினர் ராஜேந்திரன்-மாலதி. இவர்களுடைய மகன் பால மணிகண்டன்(13), தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவனாக சிறப்பாகப் படித்து வந்தார். கடந்த 2022 செப்டம்பர் மாதம், பள்ளியில் இருந்தபோது, யாரோ ஒருவர் வழங்கிய குளிர்பானத்தை சிறுவன் குடித்ததாக கூறப்படுகிறது.

மாலை வீடு திரும்பியபோது வயிற்றுவலி ஏற்பட்டதுடன், உடல்நலம் குன்றியதால் பெற்றோர் கவலை அடைந்தனர். அவர்கள் எந்த குளிர்பானமும் கொடுக்கவில்லை எனச் சொன்னதால், சம்பவம் குறித்து பள்ளியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பாலமணிகண்டனுடன் படிக்கும் மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா குளிர்பானம் கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டதில், தன் மகளை விட பாலமணிகண்டன் நன்றாகப் படித்து சிறந்த மாணவனாக இருந்ததால் ஏற்பட்ட கல்வி போட்டி மற்றும் பொறாமை காரணமாக, அந்தக் குளிர்பானத்தில் எலி விஷம் கலந்து கொடுத்தது அம்பலமானது.

இந்தக் கொடூரச் சம்பவத்துக்குப் பிறகு, சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் மரியப்பால் கிருஷ்ணன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பேரில் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு, புதுச்சேரி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் சிறையில் இருந்து வந்த நிலையில், இன்று (அக்.23) இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து, காரைக்கல் நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் தீர்ப்பளித்தார். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சகாயராணி விக்டோரியாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

தீர்ப்பை கேட்டவுடன், உயிரிழந்த மாணவனின் தந்தை ராஜேந்திரன் நீதிமன்றத்திலேயே கண்ணீர் மல்க தன் மகனை நினைத்து துயரத்தில் ஆழ்ந்தார். கல்விப் போட்டி காரணமாக ஒரு அப்பாவி  மாணவனின் உயிரை பறித்த இந்தச் சம்பவத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, காரைக்கல் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.