தீபாவளி வெளியீடுகள் முடிந்ததைத் தொடர்ந்து, அடுத்த சில வாரங்களுக்கு பெரிய தமிழ் படங்கள் வெளியாகாத சூழலில், பழைய ஹிட்டான படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் முயற்சி தீவிரமடைந்துள்ளது.

அதன்படி, அக்டோபர் மாத இறுதியில் நடிகர் அஜித்குமார் நடித்த “அட்டகாசம்” திரைப்படம் ரீரிலீஸாக உள்ளது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் தேதி நடிகர் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த “பிரண்ட்ஸ்” திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு புதிய போஸ்டர் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

“>

அந்த போஸ்டரில், ஏ.ஐ. (AI) தொழில்நுட்பத்தின் மூலம் புதிதாக வடிவமைக்கப்பட்ட விஜய் மற்றும் சூர்யா அவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், “இந்த படம் வழக்கமான ரீரிலீஸ் அல்ல; 4K டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் முழுமையாக மறுஎடிட் செய்யப்பட்டு, ரசிகர்களுக்கு புதிய திரை அனுபவத்தை வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு வெளியான “பிரண்ட்ஸ்” படம் விஜய்-சூர்யா நடிப்பில் மிகப்பெரிய ஹிட்டாகியிருந்தது. இதனை மீண்டும் திரையரங்கில் காணப்போகும் வாய்ப்பு கிடைத்திருப்பதால், இரு நடிகர்களின் ரசிகர்களிடையே பெரும் உற்சாகம் நிலவுகிறது.