“மக்களை ஏமாற்றி குடும்ப ஆட்சி செய்யும் கோபாலபுரம் குடும்பம் முதல்ல கட்சியை விட்டு வெளியேறுங்க!” என்று தமிழக அரசில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி.டி.ஆர். நிர்மல் குமார் திமுக தலைமையை மிகக் கடுமையான சொற்களில் விளாசித் தள்ளியுள்ளார்.
70 வயதிற்கு மேற்பட்ட மூத்த நிர்வாகிகளை வீட்டிக்கு அனுப்பிவிட்டு இளைஞர்களைக் கொண்டு வந்தால் மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்கள் என திமுக தலைமை நினைப்பதாகக் குறிப்பிட்ட அவர், “அறிஞர் அண்ணா சிறுகச் சிறுக ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் வசூல் செய்து கட்டிய கட்சியை, உங்கள் குடும்பத்தில் உள்ள 300 – 400 பேர் சேர்ந்து கொள்ளையடித்து லட்சக்கணக்கான கோடிகளைச் சுருட்டியதற்குத் தான் மக்கள் உங்களைப் புறக்கணித்தார்கள்!” என ஆவேசப்பட்டார்.
கட்சியில் ஜனநாயகம் வர வேண்டும் என்றால் ஸ்டாலின், உதயநிதி குடும்பத்தினர் வெளியேற வேண்டும் என்றும், ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு மாப்பிள்ளை மற்றும் பையனின் நண்பர்கள் மூலமாகத் தமிழ்நாட்டையே கொள்ளையடித்ததால் தான் ரத்தீஷ் போன்றவர்கள் வழக்கு போட்டவுடன் வெளிநாட்டிற்கு ஓடிவிட்டார்கள் என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
