வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தாழ்வான பகுதிகள் நீர்மூழ்கியுள்ளன.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு மழை தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி மூலம் வந்துள்ள பொதுமக்களின் புகார்களைப் பற்றி கேட்டறிந்த அவர், அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்பதைப் பரிசீலித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“சமூக வலைதளங்கள் மற்றும் போன் மூலம் வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். கட்டுப்பாட்டு மையத்தில் நேரில் ஆய்வு செய்து, சில பேரிடம் தொலைபேசியில் பேசினேன். ‘நானே நேரில் வந்து பார்ப்பேன்’ என்று கூறியுள்ளேன். நானும், கமிஷனரும், அதிகாரிகளும் தளத்தில் நேரடியாக சென்று நிலையை கண்காணித்து வருகிறோம்.
டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அனைத்து இடங்களிலும் நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன. மாநில அரசு முழுமையாக அலர்ட்டாக உள்ளது.
இன்று காலை 4 மணி முதல் எந்த பகுதி மக்களுக்கு உணவு தேவையோ, அவர்களுக்கு உடனடியாக சமைத்து வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது,” என துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும் சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், மாநகராட்சி மற்றும் மீட்பு துறையினர் முழு விழிப்புடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
