பெங்களூரு தெற்கு மாவட்டம் ஆரோஹள்ளி அருகே உள்ள அன்னதொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவந்த்குமார் (30). இவர் பிடதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
சுமார் 5 மாதங்களுக்கு முன்பு மல்லிகா என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், சில நாட்களாக கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ரேவந்த்குமார் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை மீண்டும் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் ஆழ்ந்த ரேவந்த்குமார், வீட்டை விட்டு வெளியேறி பிடதி ரெயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு வந்த ரெயிலின் முன்பாக திடீரென பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த பெங்களூரு சிட்டி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலைக்கு முன்பாக ரேவந்த்குமார் தனது செல்போனில் ஒரு வீடியோ பதிவு செய்து, அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், “திருமணத்திற்குப் பிறகு என் மனைவி மல்லிகா எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார். என் மரணத்துக்கு அவர் தான் காரணம். அவரின் தொல்லையை தாங்க முடியாமல் தான் இந்த முடிவை எடுத்தேன்” என கூறியிருந்தார்.
இந்த வீடியோவின் அடிப்படையில் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், ரேவந்த்குமாரின் மனைவி மல்லிகாவை பிடித்து விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த துயரச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
