ஹைதராபாத்தில் உள்ள யூசுப்குடா பகுதியில் வசிக்கும் புக்யா சங்க்ருதி என்ற பெண், தனது வாடகை வீட்டின் குளியலறையில் உள்ள விளக்கு பல்ப் ஹோல்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கேமராவை அக்டோபர் 13 அன்று கண்டுபிடித்தார். அவர் தனது கணவர் நெனவத் உமேஷுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். அக்டோபர் 4 அன்று குளியலறை லைட் வேலை செய்யவில்லை என்று வீட்டு உரிமையாளர் அசோக் யாதவிடம் தெரிவித்திருந்தார்.
மறுநாள் அசோக் மற்றும் எலக்ட்ரீசியனான சிந்து என்பவர் வந்து லைட்டை சரி செய்தனர். அப்போது அவர்கள் ரகசிய கேமராவை மறைவாக பொருத்தியிருக்கலாம் என்று சங்க்ருதி சந்தேகிக்கிறார். கேமராவைக் கண்டதும், அவர் வீட்டு உரிமையாளரிடம் கேள்வி எழுப்பினார், ஆனால் அவரும் எலக்ட்ரீசியனும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால், சங்க்ருதியும் அவரது கணவரும் மதுரநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறை உடனே வழக்கு பதிவு செய்து, வீட்டு உரிமையாளர் அசோக் யாதவை கைது செய்தது. வழக்கு ஐபிசி பிரிவு 354C (பாலியல் துன்புறுத்தல்), 448 (வீட்டிற்குள் அத்துமீறல்), மற்றும் 506 (மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டது. எலக்ட்ரீசியன் சிந்து தற்போது தலைமறைவாக உள்ளார், அவரைத் காவல்துறையினார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்க்ருதி தனது அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பெண்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
