ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மருத்துவமனையின் மருத்துவர்கள் அரிதான அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். இந்த அறுவை சிகிச்சையில், நோயாளியின் வயிற்றிலிருந்து இரும்பு ஆணிகள், நட்டுகள், போல்ட்கள், மேலும் ஒரு வாட்ச் ஆகியவற்றை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
இது பற்றி மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஷாலு குப்தா கூறுகையில், “நாகௌரைச் சேர்ந்த ஒருவர் கடும் வயிற்று வலியால் மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்தபோது, செரிமானப் பாதையில் ஒரு வாட்ச்சிக்கியிருப்பதும், பெரிய குடலில் இரும்பு பொருட்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. உடனடியாக அவரை அனுமதித்து சிகிச்சை தொடங்கினோம்,” என தெரிவித்தார்.
முதலில் மருத்துவர்கள் எண்டோஸ்கோபி மூலம் அந்த பொருட்களை அகற்ற முயன்றனர். ஆனால் அது பலனளிக்காததால், வீடியோ அசிஸ்டட் தெரபி சர்ஜரி (Video Assisted Therapy Surgery) முறையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில், நோயாளியின் வயிற்றிலிருந்து இரும்பு ஆணிகள், நட்டுகள், போல்ட்கள், மற்றும் வாட்ச் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. மேலும் டாக்டர்கள் நோயாளியின் மனநிலை சரியில்லாமல், கடந்த இரண்டு மாதங்களாக இரும்பு பொருட்களை விழுங்கி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது,” என கூறினர். இந்த அரிய அறுவை சிகிச்சை குறித்து சமூக வலைத்தளங்களில் மருத்துவர்களுக்கு பாராட்டு மழை பொழிகிறது.
