பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள், இரு நாடுகளின் எல்லையில் தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி, பாகிஸ்தானில் தாக்குதல்கள் நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் விமானப்படை சமீபத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாக்குதல் நடத்தியது. இதற்கு தலிபான்கள் கடும் கண்டனம் தெரிவித்து, பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதையடுத்து, எல்லையில் நடந்த மோதலில் ஆப்கானிஸ்தானில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தலிபான்கள் கூறினாலும், பாகிஸ்தான் அரசு இதை உறுதி செய்யவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள வடக்கு வசிரிஸ்தான் ராணுவ தளத்தில் நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. வெடிகுண்டுகளை ஏற்றிய வாகனம் ராணுவ தள வாயிலில் வெடிக்க வைக்கப்பட்டதில், 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில், இரு நாடுகளும் 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. கத்தார் நாடு இரு தரப்பையும் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
