மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் மீண்டும் அதிர்ச்சியூட்டும் குறைபாடு வெளிச்சம் பார்த்துள்ளது. சமீபத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து காரணமாக 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி இன்னும் அடங்காத நிலையில், இப்போது அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்தில் புழுக்கள் இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குவாலியர் மாவட்டம் மொரார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இடம்பெற்றது. அங்குள்ள பெண் ஒருவர் தனது குழந்தைக்கு சிகிச்சைக்காக வந்தபோது, மருத்துவர்கள் அசித்ரோமைசின் எனும் ஆன்டிபயாடிக் மருந்தை வழங்கினர். ஆனால் அந்த மருந்து பாட்டிலில் புழுக்கள் நெளிந்ததை கண்ட அந்த பெண் அதிர்ச்சியடைந்து உடனடியாக புகார் அளித்தார். சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதும் மருத்துவத் துறையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மருந்து மத்தியப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு தனியார் மருந்து நிறுவனம் தயாரித்ததாக தெரியவந்துள்ளது. புகாரின் பேரில் மருந்து ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பாட்டிலை கைப்பற்றி, அதன் மாதிரிகளை போபால் மற்றும் கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த மருத்துவமனையில் சேமிக்கப்பட்டிருந்த 306 பாட்டில்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
முதற்கட்ட ஆய்வில் சில பாட்டில்களில் புழுக்கள் இருப்பதற்கான வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டாலும், முழுமையான பரிசோதனை முடிவுகள் வரும் வரை அந்த மருந்து பயன்பாட்டை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கோல்ட்ரிப் இருமல் மருந்து மரணங்கள் இன்னும் மக்களின் நினைவில் நிற்கும் நிலையில், குழந்தை மருந்தில் புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் மருத்துவத் துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
