தமிழக வெற்றிக் கழகம் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றம் வரை சென்றது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின், சமூக வலைத்தளங்களில் இது விஜய் அவர்களின் “அரசியல் பிழை” எனக் குற்றம்சாட்டும் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, இந்த விமர்சனங்கள் பெரும்பாலும் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களிடமிருந்து வந்துள்ளன. அவர்கள், “மாநில அரசின் மரியாதையையும் உரிமையையும் விட்டுக் கொடுத்து சிபிஐ விசாரணை கோருவது தவறு” எனக் கூறி வருகின்றனர். இதன் விளைவாக, திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் இடையே சமூக வலைத்தளங்களில் கடுமையான வார்த்தைப் போராட்டம் வெடித்துள்ளது.

இதற்குப் பதிலடி அளிக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக வலைத்தளப் பிரிவு திமுகவின் பழைய வீடியோக்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில், 2014 முதல் 2019 வரை திமுக எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகளில் சிபிஐ விசாரணை கோரிய மு.க. ஸ்டாலின் மற்றும் பிற தலைவர்கள் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

“>

 

“மாநில நலனுக்காக சிபிஐ விசாரணை கோருவது தவறல்ல” என அந்தக் காட்சிகளின் மூலம் வெற்றிக் கழக ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, “அரசியலில் யார் உண்மையில் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர்?” என்ற கேள்வியை எழுப்பும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.