சட்டமன்ற கூட்டத்தொடரில் பாதியிலேயே அவையை விட்டு வெளியேறிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், தனது சமூக வலைதளப் பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் திராவிட முன்னேற்றக் கழக அரசையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் எஸ். ரகுபதி சமூக வலைதளத்தில் கடுமையான பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “போரில் வாள் சுழற்ற முடியாத வீரன் வீட்டில் வில் வித்தை காட்டினானாம்! கரூர் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் ஆணித்தரமாக பேச முடியாமல் வெளியேறிய எடப்பாடி பழனிசாமி, சமூக வலைத்தளத்தில் பயில்வான் வேடம் போடுகிறார்,” எனத் தாக்கியுள்ளார். மேலும், “முதல்வர் ஸ்டாலின் கேள்விகளுக்கெல்லாம் ஆதாரத்தோடு பதிலளித்தார். ஆனால், பதிலளிக்கத் திராணியின்றி அவையை விட்டு வெளியேறியவர், இப்போது வெளியில் வந்து வெட்டி வசனம் பேசுகிறார்,” எனக் கூறியுள்ளார்.

“>

அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதல் மகாமக நெரிசல் உயிரிழப்புகள் வரை எடுத்துக் கூறிய அமைச்சர், “அப்பொழுது 48 பேர் உயிரிழந்தபோது, ‘அவர்கள் மோட்சம் அடைந்தார்கள்’ என்று கூறியவர்கள் இப்போது கரூர் துயரத்தில் பாடம் எடுப்பது வேடிக்கை,” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், “இறந்தோரை வைத்து அரசியல் செய்யும் கேடுகெட்ட அரசியல்வாதியைத் தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. ஒன்றிய பாஜகவின் அடிமையான பழனிசாமி, தினமும் வதந்திகளில் உயிர்வாழும் ஒருவர். உண்மை என்ற வார்த்தையைச் சொல்வதற்கே அவர் தகுதியற்றவர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.