மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, அந்த அணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. நடந்து முடிந்த 2026 ஐபிஎல் தொடரில் மும்பை அணி 9-வது இடம்பிடித்து மோசமான தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவைத் தங்களது அணிக்கு இழுக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி ஏற்கனவே மும்பை நிர்வாகத்துடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும் இந்த ரேசில் அதிரடியாகக் குதித்துள்ளது.
ஐபிஎல் அரங்கில் ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) ஆகிய இரு அணிகளைத் தவிர மற்ற 7 அணிகளும் கடும் ஆர்வம் காட்டி வருகின்றன. கேகேஆர் அணி அவருக்கு கேப்டன் பதவியைத் தரத் தயாராக இருக்கும் வேளையில், சிஎஸ்கே அணி எம்.எஸ்.தோனிக்குப் பிறகான ஒரு சரியான ஆல்ரவுண்டராக அவரைப் பார்க்கிறது. தற்போதைய சூழலில், மற்ற அணிகளை விட ஹர்திக் பாண்டியாவைத் தங்கள் வசம் இழுக்க சிஎஸ்கே அணி மிகவும் சாதகமான நிலையில் உள்ளதாகவும், இதற்கான திரைமறைவு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
