ராஜஸ்தான் மாநிலம் கோட்புத்லி-பெஹ்ரோர் மாவட்டத்தில் நடைபெற்ற அக்னிவீர் பீம் சிங்கின் (19) இறுதி ஊர்வலத்தின் போது, பாஜக எம்பியும், ஜெய்ப்பூர் ரூரல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ராவ் ராஜேந்திர சிங் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காவல் கௌரவ மரியாதை வழங்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவரது நிலைமை நிலையாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்னிவீர் பீம் சிங், உத்தரகண்டில் தராலி பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்புக்குப் பின் காணாமல் நிலையில், அண்மையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. பிறகு, முழு இராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. அவரது திடமான சேவைக்காக மக்கள் ஆழ்ந்த இரங்கலையும் மரியாதையையும் தெரிவித்தனர்.

அந்த நாள் காலை, அவரது உடல் ப்ராக்புரா என்ற இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து 7 கி.மீ தூரம் ‘திரங்கா யாத்திரை’ நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். உயிரிழந்த வீரருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் பாஜக எம்பி மயங்கி விழுந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.