டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனை அருகிலுள்ள விடுதியில், முதுகலை மருத்துவர்கள் நடத்திய இரவு நேர விருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருந்தின் போது சத்தமாக இசை ஒலித்ததாக அண்டை வீட்டாரிடமிருந்து பல புகார்கள் வந்தன. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் மாணவர்கள் விருந்தை நிறுத்த மறுத்ததுடன், காவல்துறையினரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது சில மருத்துவ மாணவர்கள்  அரை நிர்வாண நிலையில் காணப்பட்டதாகவும், அந்த காட்சி சமூக ஊடகங்களில் வீடியோவாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. டூன் மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த பி.ஜி. மருத்துவர்கள் விடுதி, கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சத்தமான இசை வாசிப்பது குறித்து அருகிலுள்ள குடியிருப்போர் பலமுறை ஆட்சேபனை தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

 

நேற்று இரவு மீண்டும் அதேபோன்று சத்தம் எழுந்ததைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்றனர். அப்போது மாணவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு, சிலர் தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது.

இது பற்றி முதல்வர் டாக்டர் கீதா ஜெயின் தெரிவித்ததாவது: விருந்தில் ஈடுபட்ட மருத்துவர் அப்போது பணியில் இல்லை. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கல்லூரி நிர்வாகம் இதை தீவிரமாகக் விசாரிக்கிறது என்று கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார செயலாளர் ஆர். ராஜேஷ் குமார் அவர்களுக்கும் விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

விருந்தை ஏற்பாடு செய்த முதுகலை மருத்துவ மாணவர் விடுதியில் இருந்து நீக்கப்பட்டதுடன், அவருக்கு ₹10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதற்குடன், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற மருத்துவர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, போலீசார் அவர்களை விடுவித்தனர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.