காசா பகுதியில் போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்தி, மத்திய கிழக்கில் நீடித்த ஸ்திரத்தன்மையை நோக்கி முன்னேறும் வழிகளை வகுக்க உலகத் தலைவர்கள் திங்களன்று எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் கூடினர்.

காசா அமைதி உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். 20-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட இம்மாநாடு, மத்திய கிழக்கில் நீண்டகால அமைதி முயற்சிகளுக்கான முக்கிய தளமாகக் கருதப்படுகிறது.

எகிப்து அதிபர் எல்-சிசி, தனது உரையில், “மத்திய கிழக்கில் உண்மையான அமைதியை உருவாக்கும் திறன் கொண்ட ஒரே நபர் அமெரிக்க அதிபர் டிரம்ப்தான்” எனக் கூறி அவரை பாராட்டினார்.

இந்நிலையில் இந்த உச்சிமாநாட்டின் ஓர் சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதில், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், சிரித்தபடி இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியிடம் “நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்; அதே நேரத்தில் நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்” என நகைச்சுவையாக கூறுவதைப் போல் காட்சி காணப்படுகிறது.

 

அந்தக் காட்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூட சிரிப்பதைக் காணலாம். இதற்கு பிறகு மெலோனி சிறிது வெட்கப்பட்ட முகபாவனையுடன் இருப்பதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

துருக்கி கடந்த சில ஆண்டுகளில் புகையிலைப் பயன்பாட்டை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. சட்டங்கள், ஊடகப் பிரச்சாரங்கள் மற்றும் சுகாதாரத் திட்டங்கள் வழியாக அந்த நாடு புகையிலை ஒழிப்பு முயற்சிகளில் முன்னேற்றம் கண்டதாகவும் அறியப்படுகிறது. மேலும் இவர்களது சந்திப்பு குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.