கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த மக்கள் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட தனி நீதிபதி விசாரணைக்கு எதிராக, தமிழக வெற்றிக்கழகம் உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு, நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா அமர்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணையில், “தமிழக போலீசில் மீது நாங்கள் நம்பிக்கை வைக்க முடியவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும்” என தவெக தரப்பு வலியுறுத்தியது.
இந்த பின்னணியில், இன்று உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்று வழங்கியது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவு வழங்கியுள்ளதை தொடர்ந்து, இது நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றுள்ளது. மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிக்க நீதிமன்றம் தனி குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “இது வெறும் தேர்தல் பரப்புரை சம்பவம் அல்ல; 41 உயிர்கள் போனது. ஒரே மனிதரால் நடத்தப்படும் விசாரணை நியாயமானதல்ல எனவே நாங்கள் வலியுறுத்தினோம். சிபிஐ விசாரணை என்பது உண்மையை வெளிச்சத்தில் கொண்டு வரும் வழியாகும்” என தெரிவித்தார்.
மேலும், “இந்த வழக்கில் எந்த அதிகாரி, அரசியல் தலைவர் தொடர்புடையவராக இருந்தாலும் தக்க தண்டனை பெற்றே ஆக வேண்டும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு கோரி, பாஜகவின் இரண்டு தொண்டர்கள் தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது” என அவர் வலியுறுத்தினார்.
