தாலிபான் போராளிகள் நடத்திய எதிர்தாக்குதலில் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் அரசு, ஆப்கானிஸ்தானுடன் உள்ள முக்கிய எல்லைகளான டொர்கம், சாமன், கார்லாச்சி, அங்கூர் அட்டா, குலாம் கான் ஆகியவை அனைத்தையும் முடக்கியது.
இதனால் ஏற்கனவே பொருளாதார சிக்கல்களில் சிக்கியுள்ள ஆப்கானுக்கு மேலும் பெரிய சோதனையாக மாறியுள்ளது. ஆப்கானிஸ்தானின் 95% ஏற்றுமதி பாகிஸ்தான் வழியாகவே நடைபெறுகிறது. இந்த எல்லை மூடல் முடிவால், ஆப்கான் முழுமையாக வெளிநாட்டு வர்த்தகத்திலிருந்து துண்டிக்கப்படும் நிலைக்கு சென்றுள்ளது.
கராச்சி கடற்கரை வழியாக கடலோர வர்த்தகம் நடத்தும் ஒரே வழி பாகிஸ்தான் என்பதால், ஆப்கான் முற்றிலும் பாகிஸ்தானில் சார்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் உதவியை நாடும் நிலைக்கு தாலிபான் அரசு சென்றுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன், பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானில் உள்ள TTP பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் காபூல் பகுதிகள் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. தங்கள் இறையாட்சி மீதான தாக்குதல் எனக் கூறிய தாலிபான், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ராணுவ முகாம்களில் இரவு நேர திடீர் தாக்குதல் நடத்தியது. இதன் பின்னணியில் இருநாடுகளும் மோதலுக்கு தயாராக இருக்கின்றன என்ற அச்சம் உலகளவில் உருவாகியுள்ளது.
