அமெரிக்காவின் இண்டியானா மாநிலம் டேல் பகுதியில் 2001-ம் ஆண்டு நடந்த ஒரு கொடூர சம்பவம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. 15 வயது சிறுமி ஸ்டேசி பெய்னியை தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்து, பின் கொலை செய்த ராய் லீ வார்டு என்பவர் மீது 24 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இறுதியாக கடந்த 10-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

2001-ம் ஆண்டு ஜூலை மாதம், 29 வயதான ராய் லீ, பெய்னியின் வீட்டை நாய் காணாமல் போனதாக கூறி, கதவைத் தட்டினார். சிறுமி கதவைத் திறந்ததும், வீட்டிற்குள் நுழைந்து கதவை பூட்டிய அவர், சிறுமியின் கைகளை கட்டி வைத்து கொடூரமாக தாக்கியதுடன், பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொலை செய்துள்ளார். இந்த கொடுமையான சம்பவம் அப்போதைய அமெரிக்காவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்தக் கொலைக்கான வழக்கில் ராய் லீ மீது விசாரணை நடந்த போதிலும், சட்டத்தின் பிடியிலிருந்து அவர் பல வருடங்கள் தப்பித்திருந்தார். இறுதியாக கடந்த செப்டம்பரில், அவருக்கு இரக்கம் காட்ட முடியாது என கவர்னர் மைக் பிரான் முடிவு செய்ததைத் தொடர்ந்து, ராய் லீக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைக்கு முன், அவர் ஹாம்பர்கர், பிரெஞ்சு பிரை, உருளைக்கிழங்கு, சிக்கன் ஆல்ப்ரெடோ உள்ளிட்ட விருப்ப உணவுகளை கேட்டுக்கொண்டார்.

பெய்னியின் தாயார் ஜூலி வினிங்கர், “என் மகள் சிறுவயதிலேயே வேலை செய்து குடும்பத்துக்கு துணைபுரிந்தவர். அவரின் சிரிப்பும் குரலும் எங்களுக்கு இனி நினைவாகவே உள்ளது. அவர் ஒரு முழுமையான பெண்ணாக வளர்ந்திருக்க வேண்டும். ஆனால், அந்த வாய்ப்பு எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது” என்றார். 24 ஆண்டுகள் கழித்து நீதிபதி வெற்றி பெற்றபோதிலும், பெய்னியின் குடும்பம் இன்று வரை அந்த ஏக்கத்தில் இருந்து மீண்டிருக்கவில்லை.