நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) என்பவர் மெக்கானிக்காக இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
கடந்த 2023-ம் ஆண்டு, 15 வயது சிறுமி ஒருவர் தனது அக்காவுடன் சதீஷ்குமாரின் பட்டறைக்கு மொபட் பழுது பார்க்க வந்துள்ளார். அந்த சந்திப்பிலிருந்து சதீஷ்குமாருக்கு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்த அந்த சிறுமியுடன் சதீஷ்குமார் அடிக்கடி செல்போனில் தொடர்பில் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 2024 டிசம்பர் மாதம், சதீஷ்குமார் சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று, ஆசை வார்த்தைகளால் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் விளைவாக சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
சமீபத்தில், சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் வழங்கியது. நாமக்கல் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியிடம் இருந்து வாக்குமூலம் பெற்றனர். விசாரணையில் சதீஷ்குமாரே சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில், போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சதீஷ்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது சிறுமி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
