சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா, வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பது குறித்து நேற்று செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

“தென்மேற்கு பருவமழை அக்டோபர் 16 முதல் 18 ஆம் தேதிக்குள் இந்தியப் பகுதியிலிருந்து விலகும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் வளிமண்டல கீழடுக்கில் காற்று திசை மாறி, மேற்கு காற்று கிழக்கு – வடகிழக்கு திசையில் வீசும் நிலை உருவாகிறது. இதனுடன் சேர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த ஆண்டு 16 முதல் 18 ஆம் தேதிக்குள் பருவமழை தொடங்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் பெரும்பாலான ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிக மழையைத் தரும் நிலையில், 2 ஆண்டுகளில் மட்டுமே குறைவாக பெய்துள்ளது.

தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் இயல்பாகவோ, அதைவிட அதிகமாகவோ மழை பெய்யலாம். தென்மாவட்டங்களில் இயல்பாகவோ, அதைவிட குறைவாகவோ மழை இருக்கலாம். சாதாரணமாக இந்த பருவத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில், எந்த இடத்தில் துல்லியமாக மழை பெய்யும் என்பதை முன்கூட்டியே கணிப்பது இன்னும் சவாலாகவே உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் வடதமிழக கடலோரம், வட ஆந்திரா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் இரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகளின் தாக்கத்தால், இன்று (சனிக்கிழமை) தமிழ்நாட்டின் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், கோவை மலைப்பகுதி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் அவர் கூறினார்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் நடைபெறும் தீபாவளி பண்டிகை இவ்வாண்டு அக்டோபர் 20 ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால், “தீபாவளி தினத்தில் மழை பெய்யுமா?” என்ற கேள்வி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா கூறுகையில்,

“மழை பற்றிய துல்லியமான கணிப்பு 5 நாட்களுக்கு முன்பே கூற முடியும். எனவே இப்போது தீபாவளி தினத்தன்று மழை இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது,” என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் “அக்டோபர் 17 முதல் 21 வரை வட தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 26 தீபாவளி தினத்தில் கனமழை கொட்டியது; அதுபோன்ற நிலை மீண்டும் உருவாகலாம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறுகையில், “தீபாவளி தினத்தில் வியாபாரிகளை பாதிக்கும் அளவுக்கு கனமழை ஏற்பட வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் கனமழையோ அல்லது இடி மின்னலுடன் கூடிய வெப்பச்சலன மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது,” என்றார்.

கடந்த 20 ஆண்டுகளில் 2011 ஆம் ஆண்டில் மட்டும் தீபாவளி தினத்தில் கனமழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.