நெல்லை மாவட்டம் திடியூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களில் பலர் நேற்று திடீரென உடல்நல குறைவு காரணமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பரிசோதனைகளில் அவர்களுக்கு எலிக்காய்ச்சல் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, மாணவர் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் பதற்றம் நிலவுகிறது.

மாணவர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கல்லூரி விடுதி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில், பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்தமில்லாதது மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி இருப்பது கண்டறியப்பட்டது. உணவுப் பாதுகாப்புத் துறையினரும் நேரில் சென்று விடுதி சமையல் பிரிவில் ஆய்வு செய்தனர். அங்கு பல்வேறு சீர்கேடுகள் இருப்பதும், தூய்மையின்மை பரவலாக இருப்பதும் தெரியவந்தது.

அதாவது தாமிரபரணி வெள்ள நீர் கால்வாயை ஆக்கிரமித்து நீர் எடுத்து சுத்திகரிக்காமல் பயன்படுத்தியதால் இந்தக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. விலங்கு, எலிகளின் ரத்தம், சிறுநீர்கள் போன்றவை நீரில் கலந்திருப்பதால் இந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, மாணவர்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிக்கு சுகாதார வசதிகள் முறையாக ஏற்படுத்தும் வரை இயங்க அனுமதியில்லையென நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கல்லூரி வளாகத்தில் இயங்கி வந்த இரண்டு உணவகங்களின் உரிமமும் சுகாதார குறைபாடுகளால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.