பெண்கள் நலனைக் கருத்தில் கொண்டு கர்நாடக அரசு ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்துள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் நேற்று (அக்.09) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கும் திட்டம் ஒப்புதல் பெற்றது. இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு மாதத்திலும் பெண்கள் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பை பெறலாம். இதன்மூலம், ஆண்டுக்கு மொத்தம் 12 நாட்கள் வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெறும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் உடல் நலத்தையும் பணியிடச் சுகாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதை பெண்கள் அமைப்புகள் வரவேற்று, இது மற்ற மாநிலங்களுக்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என பாராட்டியுள்ளன.
