கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27  நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பலர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர்மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்நிலையில், கூட்ட நெரிசலைத் தடுக்க அதிகாரிகள் தவறியதாக கூறி, கரூர் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தவெக உறுப்பினரும் வழக்கறிஞருமான கார்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், “அதிகாரிகள் தங்களது கடமைகளைச் சரியாக நிறைவேற்றாததே இத்துயர சம்பவத்திற்கு காரணமாக உள்ளது. ஆகவே, அவர்களிடம் துறை ரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.