கரூரில் கடந்த மாதம் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நாட்டை அதிர்ச்சியடையச் செய்தது. இந்த துயர சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் மற்றும் அவதூறு கருத்துக்கள் பரவிய நிலையில், தமிழக சைபர் கிரைம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை 25 சமூக வலைதள கணக்குகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் போது, நீதிபதி த.வெ.க. தலைவர் விஜயின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்தார். இதனைத் தொடர்ந்து, நீதிபதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரவத் தொடங்கியது. இந்த நிலையில், பரங்கிமலை பகுதியிலுள்ள சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அஸ்தினாபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் சசிகுமார் (48), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் கண்ணன் (25), கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் (25), தூத்துக்குடி வேம்பூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி சகாய மைக்கேல் ராஜ் (35) ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான நால்வரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்கள் அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்படும் வகையில் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சமூக வலைதளங்களில் நீதிமன்றம், நீதிபதிகள் அல்லது கரூர் சம்பவம் குறித்து அவதூறு கருத்துகள் பதிவிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.