‘காந்தாரா’ திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வரும் இந்த படம், கன்னட சினிமாவின் பெருமையாக மாறியுள்ளது. இயக்குநர் ரிஷப் செட்டி வெறும் 125 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிய இந்த படத்தில், பாகுபலி போன்ற பிரம்மாண்டமும், நாட்டின் ஆன்மீக மரபுகளையும் இணைத்து மிகுந்த நேர்த்தியுடன் காட்சிப்படுத்தியுள்ளார். இதனால், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ரசிகர்கள் “இதுபோன்ற ஆழமான கலாச்சார படம் தமிழிலும் வருமா?” என ஆவலுடன் பேசும் நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் நகரில் ‘காந்தாரா’ திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க வந்த ஒரு நபர், பஞ்சுருளி தெய்வ வேடமிட்டு நடனமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்வு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்ததுடன், படக்குழுவினரும் அதைப் பார்த்து பெருமையடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, காந்தாரா குழுவினர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தமிழக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, “தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு பெரும் ஊக்கமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளனர். கலை, மரபு, ஆன்மீகம் ஆகியவற்றை இணைத்த காந்தாராவின் தாக்கம், தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே இன்னும் நீடித்து வருகிறது.