கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆதரவாக களமிறங்கி, தனது உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், அந்த நிகழ்வின் போது “இதைக் பார்க்க முடியவில்லை,மனம் மிகுந்த கவலையில் உள்ளது” என கண்ணீருடன் உருக்கமாக பேசியிருந்தார். ஆனால் சமீபத்தில் விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் கூறிய சில கருத்துகள் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. “படிக்காதவன் தன்னுடைய தலைவனை எப்படிச் சரியாக தேர்வு செய்வான்? அவனைத் தவறாகத் தேர்வு செய்ததால்தான் கூட்டத்தில் சிக்கிச் சாகிறான். எனக்கு கொலைவெறி வந்தால் அடுத்த கூட்டத்துக்குள் தள்ளி விடுவேன். நாம் ஏன் அவனை கொன்று சிறைக்கு போகணும்? அவனே நசுங்கி செத்துடுவான்!” என அவர் கிண்டலாக கூறியதைக் கேட்ட பார்வையாளர்கள் சிரித்தாலும், அதன்  தாக்கம் தற்போது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த  வீடியோ சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதும், தமிழக வெற்றிக்கழகத்தின் ஆதரவாளர்கள் அதனை பயன்படுத்தி, “அன்று சீமான் உருக்கமாகக் கண்ணீர் விட்டார், இன்று அவமானப்படுத்துகிறார். அது உண்மை கண்ணீரா? நடிகனின் நாடகமா?” என விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், “அந்த கண்ணீர் நீலி கண்ணீர் தான்” எனத் தாக்கும் வகையில் குறும்படக் காட்சிகளை உருவாக்கியும் பகிர்ந்தும் வருகின்றனர்.  சீமானின் இரட்டை நிலைப்பாட்டை எச்சரிக்கையாகப் பார்க்க வேண்டும் என விஜய் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.