இந்தியாவின் தெரு உணவுகள் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தாலும், கொல்கத்தாவில் சமீபத்தில் பதிவான ஒரு வீடியோ, “சுவை Vs சுகாதாரம்” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. பிரிட்டனில் இருந்து வந்த வீடியோ பதிவர் அலெக்ஸ் வாண்டர்ஸ் மற்றும் அவரது துணைவி, கொல்கத்தாவில் தெரு உணவாக வழங்கப்படும் பானிபூரியைச் சாப்பிட மறுத்ததுடன், அதனை முழுமையாக குப்பைத் தொட்டியில் வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோ, அலெக்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கமான @alexwandersyt இல் பகிரப்பட்டிருந்தது. அதில், “கொல்கத்தா தெரு உணவு ₹30-க்கு. ஆனால் தயாரிப்பு முறை பயத்தை ஏற்படுத்தியது. மன்னிக்கவும், நான் அதை சாப்பிட முடியவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவில், பானிபூரி அல்லது தஹி புச்கா எனப்படும் உணவை ஆர்டர் செய்த தம்பதியினர், கடைக்காரர் கையுறைகள் இல்லாமல் உணவை பரிமாறியதையும், உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கொள்கலன்கள் சுகாதாரமற்றதாக இருந்ததையும் பார்த்து பயந்துவிட்டனர்.
View this post on Instagram
பானிபூரி பரிமாறப்பட்டபோதும், அதைத் சாப்பிட தயங்கிய தம்பதியினர், இறுதியில் உணவுத் தட்டையே அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு “என் உயிரை நான் பணயம் வைக்க முடியாது” என தெரிவித்தனர். வீடியோவைப் பகிர்ந்த அலெக்ஸ், உணவை வீணாக்காமல் வேறொரு நபருக்கு வழங்க முயன்றதாகவும், யாரும் அதை ஏற்கவில்லை என்றும் விளக்கினார். கடைக்காரர் ஒரு இனிமையான நபர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதும், கலவையான கருத்துக்கள் பதிவானன. சிலர், தெரு உணவு விற்பனையாளர்களிடம் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு சமமான சுகாதாரத்தை எதிர்பார்ப்பது தவறு என விமர்சித்தனர். “உள்ளூர் மக்கள் இதையே தினமும் சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்குங்கள்” என குறிப்பிட்டனர்.
மேலும் மற்றொரு தரப்பினர், வெளிநாட்டு தம்பதியினரின் பார்வையில் உணவின் சுகாதார நிலை பயத்தை ஏற்படுத்தியது என்பது புரிந்துகொள்ளக்கூடியது என்றும், குறைந்தபட்சம் உணவுக்காக அவர்கள் மனசாட்சியுடன் நடந்துகொண்டனர் என்றும் கூறினர். சிலர், உண்மையான கொல்கத்தா சுவையை அவர்கள் அனுபவிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது எனவும் தெரிவித்தனர்.
