உத்தர பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த 29 வயதான சிவா, டெல்லியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தவர். 2015-ம் ஆண்டு மருத்துவக் கல்வியை தொடங்கிய அவர், 2020-ம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றின் போது கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி, படிப்பை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு, நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார். வேலைக்குச் சென்று வரும் தினசரி வாழ்க்கையில் கூட, அவர் தொடர்ச்சியாக மன உளைச்சலில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், நொய்டா கவுர் சிட்டி பகுதியில் உள்ள தனது சகோதரியின் அடுக்குமாடி குடியிருப்பின் 21-வது மாடிக்கு சென்ற சிவா, அங்கிருந்து திடீரென கீழே குதித்தார்.
அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், குடியிருப்பின் மற்றொரு அறையில் அவரது பெற்றோர் இருந்தது மேலும் வலியை கூட்டியுள்ளது. சம்பவம் நடந்தவுடன் உடனடியாக அவரை மீட்டு சிவாவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். சிவா எந்தவிதமான தற்கொலை குறிப்பு எதுவும் எழுதி வைக்கவில்லை என்பதையும், சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் உறுதியாக தெரியவராத நிலையில், அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பணியிடத்தை சேர்ந்தவர்களிடம் போலீசார் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
