உத்தரப்பிரதேசத்தின் ஹாபூர் நகரில் சனிக்கிழமை அன்று நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. பஞ்சாபி சமாஜ் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர் பிரவீன் சேதியை ஒரு குரங்குக் கூட்டம் நடுரோட்டில் தாக்கியது. நகரின் லக்ஷ்மண் காலியில் நடந்த இந்த தாக்குதலில் அவர் காயமடைந்தார்.

 

சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன, இதில் அவர் ஸ்கூட்டரில் வீதியில் வரும்போது குரங்குகள் திடீரென அவரை தாக்குவதும், அவர் ஓட முயற்சி செய்தும், பின்னர் தவறி விழுந்ததும் தெளிவாக தெரிகிறது.

இந்த சம்பவம் தனிப்பட்டதாக அல்ல, ஹாபூர் நகரில் நாளுக்கு நாள் மோசமாகும் குரங்குகளின் அட்டகாசத்துக்கான ஒரு எடுத்துக்காட்டு என பிரவீன் சேதி பின்னர் வீடியோவொன்றில் தெரிவித்தார். “அதிகாலையும் மாலையிலும் குரங்குகள் கூட்டமாக சாலைகளில் திரிகின்றன.

மக்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டுள்ளனர். குழந்தைகள் விளையாட முடியாமல், மூத்த குடிமக்களும் பெண்களும் பயத்தால் வெளியே வர முடியாத நிலை உருவாகியுள்ளது” எனவே அவர் கவலை வெளியிட்டார்.

நகர மக்கள், பல மாதங்களாக இது போன்ற நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், பலமுறை மாநகராட்சியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர். “ஆடைகளையும், சாப்பாடுகளையும் வெளியே வைக்க முடியாத நிலை.

நாம் விரைவில் ஒரு பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது” என நகர வாசிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ மற்றும் விவாதம் நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.