திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியில் வசித்து வந்த கார்த்திகேயன் (37), தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தவர்.
இவருக்கு கடந்த 4-ந்தேதி ஜெயஸ்ரீ (25) என்ற பெண்ணுடன் இருவீட்டார சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணத்துக்கு பின் ஒரு வாரம் கழிந்து விட்ட நிலையில், கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, நேற்று அதிகாலை 3 மணியளவில் கார்த்திகேயன், மனைவி ஜெயஸ்ரீயை படுக்கை அறையில் உள்ளே அடைத்து, தாழ்ப்பாள் போட்டு, மற்றொரு அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயஸ்ரீ ஜன்னல் வழியாக சத்தம் போட்டு உதவிக்கேட்டதைக் கேட்டு, எதிர்வீட்டில் இருந்த பெற்றோர்கள் மற்றும் அருகிலுள்ளவர்கள் வெளியே வந்து பார்க்க, அதே நேரத்தில் ரோந்து சென்ற செவ்வாப்பேட்டை போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
பின்னர், போலீசாரும், கார்த்திகேயனின் பெற்றோர்களும் மாடிக்குச் சென்று கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, அவர் தூக்கில் தொங்கியபடியாக காணப்பட்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமானது ஒரு மாதம் முடியாமலே நிகழ்ந்த இந்த தற்கொலை சம்பவம், அந்த பகுதி முழுவதும் ஆழ்ந்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
