அகமதாபாத் நகர காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் வன்ராஜ் மன்ஜாரியா, தனது வளர்ப்பு நாய் கீறியதால் ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாய்க்கடி மூலம் மட்டுமே ரேபிஸ் பரவும் என்ற தவறான நம்பிக்கையால், கீறல் ஏற்பட்ட பிறகு அவர் எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை. ரேபிஸ் நோய் உறுதியான பிறகு, அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம், வளர்ப்பு நாய்களின் நகக் கீறல் மூலமும் ரேபிஸ் பரவும் என்பதை மக்களுக்கு உணர்த்தியுள்ளது.
ரேபிஸ் நோய் நாய்க்கடி அல்லது கீறல் மூலம் மனித உடலில் நுழையும் ஒரு வைரஸ் நோயாகும். இது மூளையையும் நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. காய்ச்சல், பதற்றம், குழப்பம், புரிவதில் சிரமம், மற்றும் மாயத்தோற்றம் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தோன்றிய பிறகு சிகிச்சை செய்வது மிகவும் கடினம். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 5,726 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழப்பதாக ‘தி லான்செட்’ ஆய்வு கூறுகிறது. இதனால், உலகில் ரேபிஸ் மரணங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 9 மில்லியன் விலங்கு கடி சம்பவங்கள் பதிவாகின்றன, இதில் பெரும்பாலானவை நாய்க்கடி சம்பவங்களாகும்.
சமீபத்தில், கர்நாடகாவில் தெரு நாய் கடித்ததால் 4 வயது சிறுமி ரேபிஸ் நோயால் உயிரிழந்தார். இந்த ஆண்டு மட்டும் கர்நாடகாவில் 2.86 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும், ஆகஸ்டு மாதம் ஒடிசாவில் ஒரு தேசிய அளவிலான மாற்றுத்திறனாளி வீரரும், ஒரு விவசாயியும் ரேபிஸ் நோயால் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் நாய்க்கடிக்குப் பின் தடுப்பூசி எடுத்திருந்தாலும், உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள், ரேபிஸ் நோயின் ஆபத்து குறித்தும், உடனடி மருத்துவ நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
