அமெரிக்காவில் வேலைக்கு செல்ல விரும்பும் வெளிநாட்டினர்களுக்காக H-1B விசா கட்டணத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின் கீழ், இனிமேல் H-1B விசா பெறுவதற்கான ஆண்டுக் கட்டணம் $1,00,000 (சுமார் ரூ.88 லட்சம்) ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் அரசு வெளியிட்டுள்ள இந்த உத்தரவு, அடுத்த 12 மாதங்களுக்கு செயலில் இருக்கும் எனவும், பின்னர் நீட்டிக்கப்படுமா என்பது பற்றி  அப்போது பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த கட்டண உயர்வு, அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தேடுகின்ற இந்தியர்களுக்கு பெரும் தடையாக அமையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்கா எச்-1பி விசா கட்டணத்தை பெரிதும் உயர்த்தியுள்ளதை அடுத்து, உலகளாவிய திறமையான தொழில்நுட்ப நிபுணர்களை தன் பக்கம் இழுக்கும் நோக்குடன் சீன அரசு ‘K-விசா’ என்ற புதிய விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய K-விசா திட்டம், அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலவும் விசா கட்டணங்களால் பாதிக்கப்படும் தெற்காசிய, ஆப்பிரிக்கா, மற்றும் பிற வளர்ந்துவரும் நாடுகளிலிருந்து வரும் திறமையான தொழிலாளர்களை ஈர்க்கும் முயற்சி என சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும் தொழில்நுட்பத் துறையில் சாமர்த்த்யம் மிக்கவர்களை ஈர்க்கும் போட்டியில், சீனாவின் இந்த நடவடிக்கை புதிய சுற்றுப்போட்டியை உருவாக்கும் வகையில் உள்ளது.