உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 22 வயதான சூரஜ் குமார் உத்தம் என்பவர், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 20 வயது உணவக ஊழியர் அகன்க்ஷாவுடன் காதலாகி, கடந்த 10 மாதமாக ஒரு வாடகை வீட்டில் இணைந்து வசித்து வந்துள்ளார். ஆனால், சமீபத்தில் சூரஜின் இரட்டை முகம் தெரிய வந்ததால், அந்நேரத்தில் நடந்த சம்பவம் பரிதாபமாக முடிந்தது.

ஜூலை 21 அன்று, சூரஜ் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அகன்க்ஷா கண்டு பிடித்த நிலையில், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் கொண்ட சூரஜ், அகன்க்ஷாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். கொலையை மறைக்க, தனது நண்பர் ஆஷிஷ் குமாரிடம் உதவி கேட்டார்.

பின்னர் இருவரும் சேர்ந்து, அகன்க்ஷாவின் உடலை ஒரு கருப்பு சூட்கேஸில் அடைத்து, மோட்டார் சைக்கிளில் சுமார் 95 கி.மீ. தொலைவில் உள்ள யமுனை ஆற்றில் வீசியுள்ளனர். இந்த கொடூர சம்பவம் நடந்த இடத்தில் சூரஜ் செல்ஃபி எடுத்துத் தன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் போட்டிருப்பது, அவரை தானாகவே சிக்க வைத்துவிட்டது.

ஜூலை 22ஆம் தேதி முதல் அகன்க்ஷா காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, விசாரணை வேகமடைந்தது. இதற்கிடையில் சூரஜின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வந்த புகைப்படம் சந்தேகத்தைக் கிளப்பியது. அதை அடிப்படையாகக் கொண்டு நடத்திய விசாரணையில், சூரஜ் மற்றும் ஆஷிஷ் ஆகியோர் குற்றவாளிகள் என போலீசார் உறுதி செய்தனர்.

இதையடுத்து, கடந்த சனிக்கிழமை இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தற்போது, அகன்க்ஷாவின் உடலை யமுனை ஆற்றில் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.