ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே பயணிகளுக்கு நேரடி நிவாரணத்தை வழங்கும் வகையில் “ரயில் நீர்” பாட்டில் தண்ணீரின் விலையை குறைக்கும் முக்கிய முடிவை எடுத்துள்ளது. தற்போது 1 லிட்டர் பாட்டிலின் விலை ரூ.15-இலிருந்து ரூ.14-ஆகவும், அரை லிட்டர் பாட்டிலின் விலை ரூ.10-இலிருந்து ரூ.9-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும், பயணிகளிடம் நேரடியாக ஜிஎஸ்டி சலுகையின் பயன் சென்றடையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த முடிவு ரயில்வே பயணிகளிடையே நம்பிக்கையையும் நிவாரணத்தையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஏற்கனவே பலர் ரூ.15 மதிப்புள்ள பாட்டிலை நிலையங்களில் ரூ.20-க்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்திருந்தது. இதன் பின்னணியில்தான் விலை குறைப்பு நடவடிக்கையை ரயில்வே அமைச்சகம் தீவிரமாக எடுத்துள்ளது. இந்நிலையில் விற்பனையாளர்களின் கட்டுப்பாட்டைக் கூட கடுமையாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி 12% மற்றும் 28% ஜிஎஸ்டி விகிதங்களை நீக்கி, தற்போது 5% மற்றும் 18% மட்டுமே நடைமுறையில் இருக்கும் வகையில் பெரிய மாற்றத்தை அறிவித்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த சலுகைகள் பொதுமக்களுக்கு நேரடியாக பயனளிக்க வேண்டும் என்றும், முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ள நிலையில், ரயில்வே துறை எடுத்த இந்த விலை குறைப்பு முடிவு, மக்கள் பக்கம் நிற்கும் அரசு துறையின் சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
