காஷ்மீரின் பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி நிகழ்ந்த பயங்கர தாக்குதல் இந்தியாவை உலுக்கியது. சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை இலக்காகக் கொண்ட இந்த தாக்குதலை, லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்தியது என நம்பப்படுகிறது. இந்த சம்பவம் தேசிய அளவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதற்குப் பதிலடியாக, மே 7-ந்தேதி “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் இந்தியா ஒரு அதிரடி ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அதன் மையப் பகுதிகளிலுள்ள பயங்கரவாத முகாம்கள் இத்தாக்குதலின் முக்கியக் குறியாக இருந்தன. இந்திய விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் பல கிலோமீட்டர் ஊடுருவி, லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் அமைப்புகளின் முக்கிய முகாம்களைத் துல்லியமாக தாக்கி அழித்தன.
பஹாவல்பூர், முரிட்கே, முசாபராபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள 9 முக்கிய பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் மிகுந்த பாதிப்புக்குள்ளான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகள், தங்களது முகாம்கள் அழிக்கப்பட்டதைத் தங்களே உறுதிப்படுத்தியுள்ளன. இந்திய ராணுவத்தின் திட்டமிட்ட தாக்குதலால், பயங்கரவாதிகளுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கம் தொடர்வதாகவும், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புகள் தங்களது முகாம்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன என இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலான அந்த பகுதி இந்திய தாக்குதல்களுக்கு எட்டாததாக இருக்கக்கூடும் என பயங்கரவாதிகள் எண்ணுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பயங்கரவாத அமைப்புகள் ஓட்டம் பிடிக்க நேரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலால், எதிர்காலத்தில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் பெரிதும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
