மும்பை நகரில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சோகமான சம்பவம் கண்டிவாலி பகுதியில் நிகழ்ந்துள்ளது. மராட்டிய மாநிலம் மும்பை புறநகர் மாவட்டத்திலுள்ள கண்டிவாலி பகுதியில் அமைந்துள்ள ஒரு கோவிலில், 52 வயதான ஒருவர் பூசாரியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே அந்த கோவிலுக்கு வருவோருடன் நெருக்கமாக பழகி வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், அந்த பூசாரி 19 வயது இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு, தன்னை தனியாக சந்திக்குமாறு கேட்டதாகவும், இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் கண்டிவாலி போலீசில் இன்று அதிகாலை 2 மணிக்கு புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர் மற்றும் பூசாரியை தேடினர்.
பூசாரியை தேடி கோவிலுக்கு சென்ற போலீசார், பெரும் அதிர்ச்சியடைந்தனர். கோவில் வளாகத்தில் உள்ள பேனில், பூசாரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார். உடனடியாக அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சம்பவத்தின் பின்னணியைக் கவனமாக விசாரித்து வருகின்றனர்.
