மும்பை கோரேகான் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், செப்டம்பர் 15 அன்று 4 வயது சிறுமி தனது பாட்டியுடன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால், மாலையில் வீடு திரும்பிய சிறுமி, பிறப்பு உறுப்பு பகுதியில் வலி இருப்பதாக வேதனையுடன் கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். பள்ளியில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர், சிறுமியை கழிவறையில் தகாத முறையில் தொட்டதாக குடும்பத்தினர் பள்ளி நிர்வாகத்திடமும், காவல்துறையிடமும் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர்.

புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பெண் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ஒரு பெண் ஊழியர், கடந்த 2 ஆண்டுகளாக அந்தப் பள்ளியில் பணிபுரிந்து வருவதாகவும், சிறுமியை தகாத முறையில் தொட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், இதற்கான உறுதியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர். ஒரு பெண் ஊழியர் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்த கொடூர சம்பவம், மும்பை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.