ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் போலீஸ் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் தீபக் குமார் ரவுத் என்பவர், தனது மனைவியான போக்குவரத்து போலீஸ் அதிகாரி சுபமித்ரா சாஷுவுடன் கடந்த சில மாதங்களாக கடன் விவகாரத்தில் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். ரூ.10 லட்சம் கடன் தொடர்பாக ஏற்பட்ட மனஉளைச்சல், இடையே ஏற்பட்ட தகராறு எல்லாம் வன்முறையில் முடிந்தது.

சமீபத்தில், காரில் சென்ற இருவருக்கும் மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் தனது மனைவியை காருக்குள் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்த தீபக், பிணத்துடன் ஒரு நாள் முழுவதும் காரில் சுற்றியபின், புவனேசுவரில் இருந்து 750 கி.மீ தொலைவிலுள்ள கியோஞ்சி என்ற ஊரில் மனைவியின் உடலை புதைத்துவிட்டு, அருகிலுள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததோடு, செல்பியும் எடுத்துள்ளார்.

அடுத்த நாள் அலுவலகத்துக்கு எதுவும் நடக்காதது போல் சென்றார். ஆனால் அவரது நடத்தை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சுபமித்ரா காணாமல் போனதும், அவரது மொபைல் பதிவுகளும் விசாரணைக்குத் தூண்டிவிட்டன. இறுதியில், மனைவியை கொன்றது உண்மையென்று ஒப்புக்கொண்ட தீபக் குமார் ரவுத் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.