மேற்கு வங்காள மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள காக்த்வீப் பகுதியில் உள்ள பிரேந்திர வித்யாநிகேதன் அரசு பள்ளி வளாகத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தாக்குதல் நடத்தியதைக் காட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவது, நிறுவன நிர்வாகக் குழுத் தலைவர் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினரான திரிதிப் பாருய் என்பவர்.

பள்ளி நிர்வாகம் வெளியிட்ட சிசிடிவி காட்சிகளில், திரிதிப் பாருய், பள்ளித் தலைமை ஆசிரியர் மிலன்காந்தி பால் மீது மாணவர்கள் முன்னிலையில் தள்ளியும், தாக்கியும் பேசும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்நிலையில் , மாணவர்களிடமிருந்து பயண செலவுக்காக பணம் வசூலிக்கப்பட்டது குறித்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த தாக்குதலுக்கு விளக்கம் அளித்த தலைமை ஆசிரியர் கூறுகையில்: “திரிதிப் பாருய் ஒரு ஆவணத்தை எடுத்து வந்து, அதில் கையெழுத்திட சொன்னார். அதில், நிர்வாகக் குழுவிடம் தெரிவிக்காமல் பணம் வசூலித்ததாக பொய்யான குற்றச்சாட்டுகள் இருந்தன. நான் கையெழுத்திட மறுத்ததும், அவர் என் கழுத்தில் அடித்தார். அலுவலகத்திலிருந்து தள்ளி வெளியே இழுத்து அடித்தார்” என தெரிவித்தார். இதனால் அவரது கை மற்றும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது காக்த்வீப் சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக திரிதிப் பாருய் கூறுகையில், தாக்குதலுக்கு தலைமை ஆசிரியரையே பொறுப்பாகக் கூறியுள்ளார்: “பண வசூல் தொடர்பான ரசீதைக் காட்ட நான் அவருடைய அலுவலகத்திற்குச் சென்றேன். அவர் காகிதத்தை எறிந்துவிட்டு என்னைத் தள்ளினார். அவர் என்னை அடிக்க வந்தபோது, நானும் தற்காப்பு நடவடிக்கையாக தடுக்க நேர்ந்தது” என விளக்கம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், மாநில பாஜக தலைவர் சாமிக் பட்டாச்சார்யா கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில கல்வித்துறையில் நடக்கும் இந்த வன்முறைச் செயல்கள், திரிணாமுல் காங்கிரசின் உண்மையான முகத்தை வெளிக்கொணர்கின்றன” என்று தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், குறித்த சிசிடிவி காட்சியையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் இதற்குத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பதிலடி கொடுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது என்று கூறியுள்ளனர்.