நாடு முழுவதும் தெருநாய்கள் அதிகமாகி மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உத்தரப் பிரதேச அரசு புதிய நடவடிக்கையை எடுத்து உள்ளது. அதன்படி, ஒரே தெருநாய் காரணமின்றி இரண்டு முறை மனிதர்களைக் கடித்தால், அந்த நாயை வாழ்நாள் முழுவதும் விலங்கு காப்பகத்தில் அடைத்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை நாய்களுக்கு ‘ஆயுள் தண்டனை’ விதிப்பதாகவே கருதப்படுகிறது.

முதன்முறையாக ஏதாவது நபரைக் காரணமின்றிக் கடித்தால், அந்த நாய் 10 நாட்கள் விலங்கு மையத்தில் கண்காணிப்பு முகாமில் வைக்கப்படும். அவ்வப்போது நாயின் நடத்தையை கண்காணித்து, தேவையான வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாய்க்கு மைக்ரோசிப் பொருத்தப்படும், இதன்மூலம் அதன் இருப்பிடத்தை கண்காணிக்க முடியும். இதே நாய் மீண்டும் ஒருவரைக் காரணமின்றி கடித்தால், அந்த நாய் மீண்டும் சாலைகளில் விடப்படாமல், வாழ்நாள் முழுக்க காப்பகத்தில் அடைக்கப்படும் என உத்தரவு கூறுகிறது.

இத்துடன், அந்த நாயை யாராவது தத்தெடுக்க விரும்பினால் மட்டும், காப்பகத்திலிருந்து விடுவிக்கப்படும். ஆனால், தத்தெடுக்க வருபவர்கள் ஒரு உறுதிமொழி பத்திரம் கையெழுத்திட்டு, ‘இந்த நாயை தெருவில் விடமாட்டோம்’ என்று உறுதி அளிக்க வேண்டும். அந்த நாயை மீண்டும் தெருவில் விட்டால், தத்தெடுத்த நபர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. இந்த புதிய உத்தரவை மாநில முதன்மைச் செயலாளர் அம்ரித் அபிஜாத் வெளியிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ், தெருநாய்களால் கடிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசி பெற்றால், அந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெறும். கடித்த நாயை கண்டறிந்து விலங்கு மையத்திற்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பாக பிரயாக்ராஜ் மாநகராட்சி கால்நடை அலுவலர் டாக்டர் விஜய் அம்ரித் ராஜ் தெரிவித்ததாவது:  “நாய்கள் விலங்கு மையத்திற்குக் கொண்டுவரப்பட்டவுடன், அவை கருத்தடை செய்யப்பட்டுள்ளதா என்பதை நாங்கள் பரிசோதிப்போம். இல்லையெனில், கருத்தடை செய்வோம். பின்னர் 10 நாட்கள் அவற்றின் நடத்தையை கண்காணிக்கப்படும். நாய்கள் விரைவில் விடுவிக்கப்படுவதற்கான நிபந்தனைகளில் முக்கியமானது. அதன் நடத்தை மற்றும் மைக்ரோசிப் பொருத்தம்.” மேலும், நாய் காரணமின்றி கடித்ததா, தற்காப்பிற்காக கடித்ததா என்பதை மூன்று பேர் கொண்ட வல்லுநர் குழு தீர்மானிக்கும். உதாரணமாக, யாராவது கல்லை எறிந்தால் அதற்குப் பதிலளிக்கும் விதமாக நாய் கடித்தால், அது தற்காப்பு என கருதப்படும்.

மேலும் மொத்தத்தில், தெருநாய் தாக்குதல்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், ஆக்ரோஷமான நாய்களை சட்ட முறையில் கட்டுப்படுத்துவதற்காகவும், இந்த புதிய உத்தரவை உபி அரசு அறிவித்துள்ளது.