தெலுங்கானாவின் காமரெட்டி மாவட்டத்தில், தாயை கொன்று ஆற்றில் தள்ளிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்தக் கொலைக்கு சம்பந்தப்பட்ட மகனை போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல், குற்றத்தில் அவருடன் சேர்ந்திருந்த மைனரையும் காவலில் எடுத்துள்ளனர்.
கொல்லப்பட்ட வயோதிப பெண் சாயவ்வா (77) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், காமரெட்டி மாவட்டம் பிட்லம் மண்டலத்தின் போல்கபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த வியாழக்கிழமை, போல்கபள்ளி கிராம புறநகர் பகுதியில் மஞ்சிரா ஆற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் மீட்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நம்பகமான தகவல்களின் அடிப்படையில், பன்ஸ்வாடா மண்டலத்தில் உள்ள கோயகுட்டா குறுக்குவழியில், சாயவ்வாவின் மகன் எரோலா பாலையா என்பவரை போலீசார் கைது செய்தனர். குற்றச்சாட்டில் இவருடன் இருந்த மைனர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது, சாயவ்வா உடல்நலக்குறைவால் படுத்தபடுக்கையாக இருந்ததால், அவரை கவனிப்பது சிரமமாகியுள்ளது என்றும், தாயை கொல்வதற்காக திட்டமிட்டு செப்டம்பர் 8ம் தேதி இரவு, தனது இருசக்கர வாகனத்தில், மைனர் நண்பருடன் சேர்ந்து, தாயை போல்கபள்ளி பாலத்திற்கு அழைத்துச் சென்று, மஞ்சிரா ஆற்றில் தள்ளியதாக பாலையா ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த கொடூரச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குற்றவாளி பாலையா நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மைனர் சிறுவர் சிறுவர் சீர்திருத்த இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் போல்கபள்ளி கிராமத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாலையாவின் மனைவி ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தக் கொலை வழக்கை வெற்றிகரமாக விசாரித்து, குற்றவாளிகளை பிடித்ததற்காக, பன்ஸ்வாடா டிஎஸ்பி விட்டல் ரெட்டி, சிஐ திருப்பதையா, எஸ்ஐ வெங்கட் ராவ் உள்ளிட்ட குழுவினரை, காவல் கண்காணிப்பாளர் எம். ராஜேஷ் சந்திரா பாராட்டியுள்ளார்.
–
