பாமக கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, நேற்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து முக்கியமான விளக்கங்களை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், “அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் கடந்த மே 28-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. எனவே, தற்போது அவருக்கு எந்தவிதமான தலைவர் பதவியும் இல்லை. அப்படி இருக்க, மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் அவருக்கு எங்கிருந்து வருகிறது? கட்சியின் அமைப்பு விதிகளின்படி, நிறுவனர் ராமதாஸ் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த செயற்குழு அல்லது பொதுக்குழுவும் கூட முடியாது” எனக் கூறினார்.
மேலும், “விதிகளை மீறி நடத்தப்பட்ட மாமல்லபுர கூட்டம் செல்லாது. அதில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் செல்லாதவர்கள். தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள விவரங்களும் பதவிக்காலம் முடிந்த பிறகு சமர்ப்பிக்கப்பட்டவை என்பதால் அவை செல்லாது.
கடந்த 29-ஆம் தேதி நிர்வாகிகள் குழு கூடி ராமதாஸை ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுத்தது. செயற்குழு, நிர்வாகக்குழு, மாநில பொதுக்குழு ஆகிய அனைத்தும் அந்த முடிவை அங்கீகரித்துள்ளன. தற்போது ‘தலைவர்’ என தி.நகரில் முகவரி மாற்றி தற்காலிகமாக கடிதங்கள் அனுப்புவது மக்களை திசைதிருப்பும் நாடகம். இது மோசடி மற்றும் தவறான விளக்கம் வழங்கும் முயற்சி” என்றும் ஜி.கே.மணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
