2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு இன்னொரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது எழுந்த ‘கைகுலுக்க வேண்டாம்’ சர்ச்சை தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) போட்டி நடுவரான ஆண்டி பைக்ராஃப்டை மாற்றக் கோரியிருந்தது.

இந்தக் கோரிக்கையை ஐ.சி.சி அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது. டாஸ் நடைபெற்றபோது, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் இந்தியா கேப்டன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்காமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பாகிஸ்தான் அணி அதிருப்தி தெரிவித்த நிலையில், நடுவராக இருந்த பைக்ராஃப்டை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.சி.சி ஏற்கவில்லை.

இந்திய அணியின் நடத்தை மற்றும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தது தொடர்பாக உருவான கருத்துப் பேதங்களை ஐ.சி.சி தெளிவுபடுத்தியுள்ளது. டாஸ் சமயத்தில் கைகுலுக்க வேண்டாம் என்று ஏற்கனவே ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரிகள் பைக்ராஃப்டிடம் தெரிவித்திருந்ததாகவும், அது இந்தியா சார்பாக எடுத்த முடிவு அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்க காத்திருந்தபோதும் இந்திய வீரர்கள் மற்றும் ஊழியர்கள் எதிர்வினை காட்டவில்லை என்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, இந்திய அணிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இருப்பினும், ஐ.சி.சி பைக்ராஃப்டின் நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை என்றும், அவர் 17ம் தேதி நடைபெறும் பாகிஸ்தான்–ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதும் போட்டியில் நடுவராகவே இருப்பார் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளது.